search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கன்னியாகுமரி மாவட்டம்"

    குமரி மாவட்டத்தில் வாகன சோதனையில் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியதாக 346 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணியாமல் செல்வோர் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் உத்தரவிட்டிருந்தார்.

    அதன்படி, நேற்று நாகர்கோவில், தக்கலை, குளச்சல், கன்னியாகுமரி ஆகிய சப்-டிவிசன்களில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். நாகர்கோவிலில் நடந்த வாகன சோதனையில் ஹெல்மெட் அணியாமலும், குடித்து விட்டு வாகன ஓட்டியதாக 13 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அபராதம் விதித்தனர்.

    தக்கலை பகுதியில் நடந்த வாகன சோதனையில் குடித்து விட்டு வாகனம் ஓட்டியதாக 50 பேர் மீதும், முறையான ஆவணங்கள் மற்றும் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியதாக 52 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    குளச்சல் சந்திப்பு பகுதியில் நடந்த சோதனையில் ஆவணங்கள் மற்றும் ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிள், வாகனம் ஓட்டி வந்ததாக 57 பேர் மீதும், குடித்துவிட்டு மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்ததாக 20 பேர் மீதும் முறையான ஆவணங்கள் இன்றி வாகன ஓட்டி வந்ததாக 30 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அபராத தொகை விதித்தனர்.

    சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் போலீசார் முக்கிய சந்திப்பு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அதில், ஹெல்மெட் அணியாமலும் மற்றும் குடிபோதையில் வாகன ஓட்டி வந்ததாக 100 பேர் மீதும் ஆவணங்கள் இன்றி வாகனம் ஓட்டி வந்ததாக 24 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

    நேற்று மாவட்டம் முழுவதும் நடந்த இந்த தொடர் சோதனையில் 346 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இன்றும் மாவட்டம் முழுவதும் முக்கிய சந்திப்பு பகுதிகளில் சோதனை நடைபெற்றது. #tamilnews
    கன்னியாகுமரி மாவட்டம் கொற்றிக்கோடு பகுதியில் மணல் கடத்தியது தொடர்பாக 2 பேரை கைது செய்த போலீசார் 3 லாரிகளை பறிமுதல் செய்தனர்.
    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டம் வழியாக கேரளாவிற்கு மணல் மற்றும் கனிம வளங்கள் கடத்தப்பபடுவதாக புகார் வந்தது. இதையடுத்து ரோந்துப் பணியை தீவிரப்படுத்த போலீசார் அறிவுறுத்தப்பட்டது.

    அதன்படி குமரி மாவட்ட மணல் கடத்தல் தடுப்பு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் திலீபன் மற்றும் போலீசார் நேற்று கொற்றிக்கோடு பகுதியில் ரோந்து சென்றனர்.

    அவர்கள் சித்திரங்கோடு பகுதியில் வரும்போது அந்த வழியாக லாரி ஒன்று வேகமாக வந்தது. இதில் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் ஆற்று மணல் இருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து லாரியில் மணல் கொண்டு வருவதற்கான ஆவணங்களை சரிபார்த்தனர். மணல் கொண்டு வருவதற்கான எந்த ஆவணமும் இல்லை. மணல் கடத்தி வந்த லாரியை பறிமுதல் செய்தனர். டிரைவர் ராஜேந்திரன் (வயது 54), ரெஜிகுமார் (37) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    மேலும் அவர்களிடம் மணல் எங்கிருந்து கொண்டு வரப்பட்டது என விசாரணை மேற்கொண்டனர். அதில் கொக்கோட்டான் பாறை பகுதியில் இருந்து கொண்டு வருவது தெரிய வந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் குறித்து கொற்றிக்கோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கன்னியாகுமரி - திருவனந்தபுரம் இரட்டை ரெயில் பாதை பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதற்காக கன்னியாகுமரி ரெயில்நிலையம் பகுதியில் இருக்கும் மணலை எடுத்து இரட்டை ரெயில்வே பணிக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இங்கிருந்து அனுமதியின்றி சில லாரிகள் தனியாருக்கு மணல் திருட்டு தனமாக விற்கப்படுவதாக மணல்கடத்தல்பிரிவு போலீசாருக்கு கிடைத்தது.

    இதையடுத்து மணல் கடத்தல் பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் திலீபன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது இரண்டு லாரிகளில் மணலை ஏற்றி அருகில் உள்ள தனியார் இடத்தில் கொட்டுவது தெரிந்தது. இதனையடுத்து போலீசார் அந்த 2 லாரிகளையும் பிடித்து கன்னியாகுமரி போலீசில் ஒப்படைத்தனர். #tamilnews
    கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் சுருளோட்டில் அதிகபட்சமாக 28 மிமீ மழை பெய்துள்ளது.
    நாகர்கோவில்:

    தென்மேற்கு வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலை கொண்டுள்ளது. இந்த தாழ்வு பகுதியானது மேற்கு திசையில் நகரமெனவும் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யுமென்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

    இந்த நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே அவ்வப்போது மழை பெய்து வந்த நிலையில் நேற்றிரவு கன்னியாகுமரி, கொட்டாரம், மயிலாடி, சாமித்தோப்பு, சுருளோடு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. சுருளோட்டில் அதிகபட்சமாக 28 மி.மீ. மழை பதிவானது.

    கொட்டாரம், சாமித்தோப்பு, கன்னியாகுமரி பகுதியில் இன்று காலையில் வானத்தில் கருமேகங்கள் திரண்டு காணப்பட்டது. திடீரென பலத்த மழை கொட்டி தீர்த்தது. சுமார் 1 மணி நேரமாக கனமழை பெய்தது.

    சுசீந்திரம், நாகர்கோவில், ஆரல்வாய்மொழி, குலசேகரம், திற்பரப்பு, முள்ளங்கினாவிளை, அடையாமடை மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் மழை பெய்தது. மழையின் காரணமாக பள்ளிக்கு சென்ற மாணவ- மாணவிகள் குடை பிடித்தவாறு சென்றனர்.

    மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் விட்டு விட்டு மழை பெய்து வருவதால் அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து அதிகரித்துள்ளது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளின் நீர்மட்டமும் வெகுவாக உயர்ந்து வருகிறது.

    48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 26.40 அடியாக இருந்தது. அணைக்கு 451 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 656 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 72.10 அடியாக உள்ளது. அணைக்கு 237 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 120 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. மாம்பழத்துறையாறு, முக்கடல் அணைகள் முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிகின்றன.

    மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மி.மீ. வருமாறு:-

    பேச்சிப்பாறை-8, பெருஞ்சாணி-7.4, சிற்றாறு-1-9.8, சிற்றாறு-2-22.2, மாம்பழத்துறையாறு-3, புத்தன் அணை-8, திற்பரப்பு-24, முள்ளங்கினாவிளை-18, நிலப்பாறை-12, அடையாமடை-14, கோழிப்போர் விளை-6, மயிலாடி-15.2, பூதப்பாண்டி-2.6, சுருளோடு-28, பாலமோர்-8.4. #tamilnews
    ×